இருக்கன்குடி மாரியம்மன் கோயில்

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இந்த ஊரிலிருக்கும் மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது.

தல வரலாறு 

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சானம் பெருக்க வந்த பெண் ஒரு இடத்தில் கூடையை வைத்துச் சானம் பொறுக்கிச் சேர்த்திருக்கிறாள். ஓரளவு சானம் சேர்ந்த பின்பு அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள். (கிராமப்பகுதிகளில் பக்தியுடன் இருப்பவர்களிடம் சாமியே அவர்களுக்குள் இறங்கி அவர்கள் மூலம் ஆடும் நிலைக்கு சாமியாடுதல் என்று பெயர். இந்த நிலையில் அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு அருள் வாக்குகள் என்று பெயர்). சாமியாடிய அந்த பெண் அந்த கூடை இருக்கும் இடத்தில் சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து கோயில் அமைத்து வணங்கினால் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர். இந்த கோயிலின் தல வரலாறு இதுதான்.

தேவேந்திரக் குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவரான இந்தப் பூசாரிப் பெண்ணின் குடும்பத்தினர் வழியில் வந்தவர்கள் இந்தக் கோயிலின் பரம்பரைப் பூசாரிகளாகவும், கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாகவும் இருந்து கோவிலை நிர்வகித்து வந்தனர். தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை இக்கோயில் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட பின்பு கோயிலில் பூஜை செய்யும் உரிமை மட்டும் அந்தக் குடும்பத்தினருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதுடன் அறங்காவலர் பொறுப்புகளும் சிலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கோயில் அமைந்துள்ள இடம் 

வைப்பாறு, அர்ச்சுணன் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே மணல் திட்டாயிருக்கும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப் பட்டுள்ளது.

கோயில்களில் மாரியம்மன் இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருக்கும். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியம்மனின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்கின்றனர்.

இருக்கன்குடி பெயர்க் காரணம் 

கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுணன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால் இருக்கங்கை குடி என்று இருந்து பின்னால் அது இருக்கன்குடி என்றாகி விட்டது. இந்த அர்ச்சுணன் நதி புராணப் பெருமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த அர்ச்சுணன் நதி வத்திராயிருப்பு என்கிற மலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகி இங்கு வருகிறது. முன்பொரு காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காடுகளில் திரிந்து இந்தப் பகுதிக்கு வந்திருக்கின்றனர். இங்கு நீராடுவதற்கு தண்ணீர் இல்லாததால் பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுணன் கங்கையை வேண்டி தனது அம்பால் பூமியைப் பிளந்து தண்ணீரை வெளியில் கொண்டு வந்தார் என்றும் இந்த ஆற்றை உருவாக்கியது அர்ச்சுணன் என்பதால் இதற்கு அர்ச்சுணன் ஆறு என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

வழிபாட்டு முறைகள் 

  • இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வருபவர்கள் விளக்கு போடுதல், அம்மனுக்குப் புடவை சாத்துதல், பூஜை செய்தல் போன்ற வழக்கமான வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
  • அக்கினிச் சட்டி எடுத்தல், ஆயிரங்கண் பானை எடுத்து வலம் வருதல் போன்றவை மூலம் அம்மனை வழிபடுகின்றனர்.
  • இங்கு குழந்தையில்லாதவர்கள் குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர்.
  • உடல் குறைபாடுள்ளவர்கள் உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர்.
  • இது தவிர கயிறு குத்துதல், ஆடு, கோழி பலியிட்டு அசைவ உணவு சமைத்து அன்னதானம் செய்தல் போன்றவையும் செய்யப்படுகிறது. (பொதுவாக எந்த மாரியம்மன் கோயில்களிலும் ஆடு, கோழி போன்றவற்றை உயிர்ப் பலியிடும் வழக்கம் கடைப் பிடிக்கப்படுவதில்லை. இந்தக் கோயில்களில் இருக்கும் கருப்பசாமி பொன்ற காவல் தெய்வங்களுக்குத்தான் உயிர்ப்பலியிடும் வழக்கம் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் இது மாரியம்மனுக்குச் செய்யும் வேண்டுதலாகிக் கொண்டிருக்கிறது.)

சிறப்பு விழாக்கள் 

ஆடி, தை, பங்குனி மாதங்களில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தென் மாவட்டங்களின் பல ஊர்களிலிருந்தும் அதிகமான மக்கள் வருவதால் இந்த நாட்களில் மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

தற்போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் அதிகமான மக்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

துணைக் கடவுள்கள் 

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வாழவந்தம்மன், ராக்காச்சி அம்மன், பேச்சியம்மன், முப்பிடாரியம்மன் போன்றவைகளுக்கும் காவல்தெய்வமான கருப்பசாமிக்கும் துணைக் கோயில்கள் உள்ளன.

பயண வசதி 

மதுரை யிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் நகர் இருக்கிறது. இங்கிருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து இருக்கன்குடிக்கு நகரப்பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

இரயில் பயணத்தில் மதுரை யிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோயில் செல்லும் வழியில் இருக்கும் சாத்தூர், விருதுநகர் போன்ற ஊர்களுக்குச் சென்று அங்கிருந்து பேருந்து மூலமாக இருக்கன்குடிக்குச் செல்லலாம்.

Orange Grove. Freshly squeezed in 2017
Powered by Webnode
Create your website for free! This website was made with Webnode. Create your own for free today! Get started